உறைந்த கணத்தில்  இருந்து சலனமுற்று  நகர்ந்து கொண்டிருந்தது காசியினூடே கங்கை,  இன்னும் புலரா இக்காலையில் நிறைந்து நகர்வது  தெய்வ அருளா, எங்கும் நிறைந்த பிரம்மமா, உறைந்து இறுகிய குளிரை உடைத்து கால் நனைத்தார் ஆதி சங்கரர், அந்த குளிரில் உடலில் ஒரு குளிர்ச்சி பரவியது மூச்சு ஆழ்ந்தது நெஞ்சு நிறைந்தது, நினைவு ஒன்றில் நின்றது, இந்த கணம் தவிர அவருக்கு எதுவும் தோன்றவில்லை,

நல்லது குளித்தாயிற்று கூடவே பொழுதும் புலர துவங்கியாயிற்று, இனி அன்றாட பணிகளை கவனிக்கலாம், அத்வைத காலடியை காசியில் அழுத்தமாய் பதித்து வீதிகள் வழியே கடந்து கொண்டிருந்த சங்கரரரும் சீடர்களும், கையில் கள் பானை  கொண்டு கூடவே நாய் ஒன்றல்ல  நான்கு , பக்கத்தில் ஒருத்தி மனையாள், பார்வையும் கூட அழுக்காகும் என்ற உருவம், நகர்ந்தது மலையென கூறலாம் அத்தனை சாவகாசமாய் அந்த மலை போன்ற உருவம் எதிரே வந்து கொண்டிருந்தது, அவன் நகர்வதாய்  தெரியவில்லை, அருந்திய கல்லால் அவன் கண்ணில்   எரிந்தது போதையின் ஜோதி,

 அவன் நகரவில்லை, தன்  சாந்த இயல்பிலிருந்து நகர்ந்தது சங்கரரின் மனம், சிந்திப்பதை காட்டிலும் அத்தனை வேகமாக வீசினார் வார்த்தைகளை, “அட சண்டாளனே வருவதை அறியவில்லையா, என் பாதையில் இருந்து விலகு அப்பால் செல்”, அவன் கண்கள் கள்ளினால் சிவந்து இருந்தது, சங்கரர் கண்கள்  கோபத்தால் சிவக்க துவங்கியிருந்தது,

அந்த பெரும் மனிதன் புன்னகைக்க துவங்கினான்  முதல் சூரிய கிரணம் இருளை கிழிப்பதை போல அவன் கருத்த மேனியில் ஒளிர்ந்தன பற்கள், “பிரம்மத்தை உணர்ந்த பிராமணரே , சூத்திரானாய் பிறந்து தன செயல்களால் எவன் உயர் நிலையை அடைகிறானோ அவனே அந்தணன் இருபிறப்பாளன் அந்த அந்தணர்களுள் உயர்ந்தவரே, நீங்கள் யாரை நகர சொன்னீர்கள் என சற்று விளக்காமாக சொல்லுங்கள்”, அவன் சங்கரரை நோக்கி பேசியவைகள் அவருக்கே சற்று வியப்பை அளித்தது, இவனை சண்டாளன் என்றேன் இவனோ என்னை பிரம்மத்தை உணர்ந்த பிராமணனே என்கிறானே  இருபிறப்பில்  உயர்ந்தவரே என்கிறான், என்ன விந்தை இது என சிந்திக்கும் பொழுதே அந்த கருங்குன்று மேலும் வார்த்தைகளை பொழிய துவங்கியது, “நீங்கள் எதை உங்கள் பாதையில் இருந்து நகர கூறினீர்கள் இந்த உடலையா அல்லது உள்ளே உறையும் சுத்த அறிவாகிய ஆன்மாவையயா, உணவால் உண்டாக்கப்பட்ட இந்த உடல் என்றால் உங்களுடையதும் என்னுடையதும் உணவாலே உண்டாக்கப்பட்டது தானே மேலும் உங்கள் வாதப்படியே அத்தனையும் பிரம்மம்தானே அப்படியெனில் ஒரு பிரம்மம் இன்னொரு பிரமத்தை ஏன் நகர சொல்ல வேண்டும் அய்யா, நல்லது இந்த ஆன்மாவை எனில்,  தங்கள் கூறியதை போல அனைவர் உள்ளும் உறைவது ஒரே ஆன்மா தானே இதில் புலையன் பிரமாணன் என எப்படி வேற்றுமை கண்டீர்கள், இன்னுமொன்று எவராலும் அசுத்த படுத்த முடியாதது ஆன்மா எனில் நான் ஏன் நகர வேண்டும் , இதோ நகர்கிறதே கங்கை இதில் பிரகாசிக்கும் சூரியன் சேரிநீரில்  கருத்தா தெரிவான்,இல்லை எங்கும் பரந்த ஆகாயம்  பொற்குடத்தில் நிறைவது போல என் கல்லுபானையில் நிறையாதா ? எல்லாம் பிரம்மம் எனில்  பிராமணன், புலையன் என எப்படி வேற்றுமை கொண்டீர்கள்” சங்கரரின் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிற்கும் சக்தியை இழப்பதாக தோன்றியது , பாரதகண்டத்தின் அத்தனை பேரையும்  வென்ற தர்க்க வாதியின் கணங்கள் உறைந்தது போல தோன்றியது,அந்த மகானின் கரங்களும் மனதும் செய்ய தூண்டியது ஒன்றே என்பதை போல எவனை சண்டாளன் என்றாரோ அவன் கால்களில் விழுந்தார், கண்களில் கண்ணீர் மனதுக்குள் மெல்ல கூற துவங்கினார்

 
 

” விழித்திருக்கும்போதும் கனவிலும் உறக்கத்திலும் ஒளிர்வது ஒரே ஆன்மாவே என்பதையும், படைப்பின் பிரமாண்டம் முதல் நுண்ணிய உயிர்கள் வரை அனைத்திலும் உறைவது ஒரே ஆன்மா என்பதையும் அதுவே பிரபஞ்சத்தின் செயல்களின் சாட்சியாகவும் விளங்குகிறது என்பதையும் காண முடியாவிடினும், நானே அந்த பிரம்மம் என்பதை எவர் உணர்கிறாரோ அவரே என் குரூ,

 

நான் மேலும் இந்த பிரபஞ்சத்தில்  காணப்படும் அனைத்துமே பிரம்மமே, மனிதனின் மூன்று குணங்களாலே  இந்த பிரம்மம் பல்வேறு பொருளாக உயிராக வடிவெடுக்கிறது, இந்த வேற்றுமையை கடந்து அனைத்தும் பிரம்மமே என எவர் உணர்கிரரே அவரே என் குரு,

 

குருவின் மொழியறிந்து அழியக்கூடியது மாயை என உணர்ந்து, சலனமற்ற மனதுடன் எங்கும் நிறைந்த  பிரம்மத்தை தியானித்து செய்த வினையும் செய்கின்ற வினையும்   தூய உணர்வினால் எரித்து, இந்த பிறவி என்பதே பிரம்மத்தை அடையவே என்பதை எவர் உணர்ந்தவ்ரோ அவரே என் குரு,

 

பிரகாசமான சூரியனை மேகங்கள் மறைப்பதை போல அறியாமையால் மறைக்கப்படும் அனைத்துள்ளும்  ஒளிர்வது ஒரே ஆன்மாவே அந்த பரிபூரண பிரம்மமே  என்பதைஉணர்ந்தவரே உண்மையான யோகி அவரே என் குரு , 

 

எந்த பேரானந்த கடலின் சிறு துளியினால் இந்திராதி தேவர்கள் திருப்தி அடைவார்களோ முனிவர்கள் அமைதியான உள்ளத்தை  பெற்றவர்கள் ஆவார்களோ, அந்த பிரம்மத்தை தன்னுள் உணர்ந்து ஒன்றி கலந்தவரே, அந்த பிரம்மம் ஆனவரே என் குரு,

 

இறையே இந்த உடலால் நான் உன் அடிமை, மூன்று விழிகளை உடைய இறைவா என் ஆன்மா உன் பெரும் ஜோதியின் சிறு பொறி, நீயே என்னுள்ளும் காணும் அனைத்து உயிரிலும் நிறைந்தவன் வேதங்களின் மூலம் என் அறிவின் மூலம் நான் அறிந்த என் உறுதியான நிலைப்பாடு இதுவே”

 

சண்டாளன் என கூறப்பட்ட அந்த மலை சங்கரருக்கு இப்போது சங்கரனாக மெல்ல பார்வையில் இருந்து மறைந்து கொண்டிருந்தது.     

 
 
Advertisements